மானாமதுரை வைகை ஆற்றில் குப்பைகளை கொட்டும் நகராட்சி ஊழியர்கள்
மானாமதுரை வைகை ஆற்றில் நகராட்சி ஊழியர்கள் குப்பைகளை கொட்டுவதாகவும், கழிவுநீரை விடுவதாகவும் புகார் எழுந்துள்ளது.;
மானாமதுரை தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு தினமும் 8 முதல் 10 டன் வரை குப்பை சேகரமாகிறது. இதற்கான குப்பை கிடங்கு மாங்குளம் அருகே 4.5 ஏக்கரில் ரூ.55 லட்சத்தில் அமைக்கப்பட்டது. அதேபோல் வைகை ஆற்றையொட்டியுள்ள அரசகுழி மயானம் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.8 லட்சத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை தூளாக்கும் இயந்திரம் நிறுவப்பட்டது. ஆனால் அந்த இயந்திரம் செயல்பாட்டில் இல்லை.
இந்நிலையில் நகரில் சேகரமாகும் குப்பைகைளை அரசகுழி மாயனம் அருகே வைகை ஆற்றுக்குள் நகராட்சி ஊழியர்கள் கொட்டி வருகின்றனர். சமீபத்தில் ஆற்றில் வெள்ளம் சென்றபோது குப்பைகளும் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் தொடர்ந்து குப்பைகளை கொட்டுவதால் வைகை ஆற்று பகுதி மாசடைந்த பகுதியாக மாறியுள்ளது.
அதேபோல் இரவு நேரங்களில் தனியார் கழிவுநீர் அகற்றும் வாகனங்களை இயக்குபவர்கள் ஆற்றுக்குள் செப்டிக் டேங்க் கழிவுகளை விடுகின்றனர். தற்போது தண்ணீர் செல்வதால், அவற்றில் செப்டிக் டேங்க் கழிவும் கலந்து செல்கிறது. இவற்றை தடுக்க மாவட்ட ஆட்சியரும், நகராட்சி ஆணையரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.