ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே சுகப்பிரசவத்தில் பிறந்த இரட்டை ஆண் குழந்தை
திருப்பத்தூரில் பிரசவத்திற்காக அழைத்து சென்ற பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே இரட்டை ஆண் குழந்தை பிறந்தது;
திருப்பத்தூரில் கூலி தொழிலாளி மனைவியை பிரசவத்திற்காக அழைத்து சென்ற நிலையில், ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே இரட்டை ஆண் குழந்தை சுகப்பிரசவமாக பிறந்ததால் மகிழ்ச்சியடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் தங்கி, ஒப்பந்த முறையில் விறகு வெட்டும் தொழிலாளியாக தொழில் செய்து வருபவர்கள். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த சின்னசாமி, விஜயசாந்தி தம்பதியினர். இந்நிலையில்,, நிறைமாத கர்ப்பிணியான விஜய சாந்திக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, அருகிலுள்ள திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறப்பு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் ஏற்றி ,சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்வதற்குள் விஜயசாந்திக்கு சுகப்பிரசவமாக அடுத்தடுத்து இரு அழகான ஆண் குழந்தைகள் பிறந்தன. முன்னதாக வழியில் பிரசவ வலியால் துடித்தவருக்குஆம்புலன்ஸை நிறுத்தி செவிலியர் போதும் பிள்ளை விரைவாக செயல்பட்டு மருத்துவ உதவிகளை செய்து குழந்தைகள் பிரசவிக்க வைத்துள்ளார்.
பின்பு,தாயும், குழந்தைகளும் சிவகங்கை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நலமாக உள்ள நிலையில்,ஆம்புலன்ஸ் வாகனத்தை பாதுகாப்பாக இயக்கிய ஓட்டுனர் மலையரசனையும்,உரிய நேரத்தில் சிறப்பாக மருத்துவ சிகிச்சை அளித்த ஆம்புலன்ஸ் செவிலியர் போதும் பிள்ளையையும் மருத்துவர்களும், பொதுமக்களும் பாராட்டினர்.