உப்பாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு - போக்குவரத்து துண்டிப்பு
உப்பாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகள் முழ்கியதால்,10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வழியாக செல்லும் உப்பாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ள பெருக்கினால், செய்களத்துர் கண்மாய் நிறைந்து, 10மேற்பட்ட கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் செய்களத்தூர், குருந்தகுளம், கள்ளர் வலசை, ஒத்தவீடு, வேலூர், முருகபஞ்சான் உட்பட 10கிராமங்கள் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்ததால், பொது மக்கள், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை கூட செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
இந்த கிராமங்களில் உள்ள, 150 ஏக்கர் நெற்பயிர்கள் இடுப்பளவு தண்ணீரில் முழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் உப்பாற்றில் இருந்து செய்களத்தூர் கண்மாய்க்கு தண்ணீர் வரும் கால்வாயில், 3 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு கண்மாய்க்கு தண்ணீர் செல்கிறது. ஆனால் கண்மாய் ஏற்கனவே நிறைந்து, மறுகால் சென்று கொண்டிருக்கிறது. இதனால் கண்மாய் எந்த நேரமும் உடையும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தண்ணீர் அளவும் ஆற்றில் அதிகரித்து கொண்டே செல்வதால், கிராம மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். ஆகவே கால்வாயில் ஏற்பட்ட உடைப்புகளால் ஏற்படும் ஆபத்து கருதி, போர்க்கால அடிப்படையில் விரைந்து அடைக்க வேண்டும். சாலைகள் சரி செய்து தண்ணீரை வெளியேற்றி போக்குவரத்து உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.