கீழடி அகழ் வைப்பகம் பணி டிசம்பருக்குள் முடிவடையும்: கலெக்டர் தகவல்

திருப்புவனம் அருகே கீழடி அகழ் வைப்பகம் பணி டிசம்பருக்குள் முடிவடையும் என மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.;

Update: 2021-08-30 04:33 GMT

திருப்புவனம் அருகே கீழடி அகழ் வைப்பகம் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி பார்வையிட்டார்.

திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூரில் 7-ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. அங்கு கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை பொதுமக்கள் பார்க்கும் வகையில் 2 ஏக்கரில் ரூ.12.21 கோடியில் சர்வதேச தரத்தில் கீழடி அகழ் வைப்பகம் கட்டப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய இப்பணி வருகிற அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும். ஆனால் காெரோனா, தேர்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அடித்தளம் அமைக்கும் பணி கூட முடியாமல் இருந்தது. இதுதொடர்பான புகாரையடுத்து கடந்த ஜூனில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அகழ் வைப்பக கட்டுமான பணியை பார்வையிட்டு குறித்த காலத்திற்குள் முடிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து தற்போது கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.

பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அகழ்வைப்பகம் கட்டுமான பணி டிசம்பருக்குள் முடிவடையும். அகழ்வைப்பகம் வளாகத்தில் உள்ள பனைமரங்களை வெட்டாமல் அப்படியே விடப்படும். மேலும் இங்கு வரும் பார்வையாளர்கள் பொழுதுபோக்கும் வகையில் அருகேயுள்ள கண்மாயின் கரையை பலப்படுத்தி பூமரக்கன்றுகள் நடப்படும். அவர்கள் தங்குவதற்கு கரையில் இருக்கைகள், நடைபாதைகள் அமைக்கப்படும், என்றார். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மணிகண்டன் உடனிருந்தார்.

Tags:    

Similar News