ஊரடங்கு விதிமீறல்: மானாமதுரையில் வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
மானாமதுரையில் முழு ஊரடங்கை மீறி வாகனங்களில் வந்தவர்கள், கடைகளை திறந்து வைத்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வாகனங்களில் வந்தவர்கள் மற்றும் தெருக்களில் கடைகளை திறந்து வைத்திருந்தவர்களுக்கு, ரூ.200 முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது.
மானாமதுரையில் மளிகைக்கடைகள் காய்கறி கடைகள், இறைச்சிக் கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்து வைக்கப்பட்டிருந்தன. மதியம் 12 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் மூடப்பட்டன.
மதியம் 12 மணிக்கு மேல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி மானாமதுரை தேவர்சிலை, அண்ணா சிலை பகுதியில இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்தவர்களுக்கு மானாமதுரை வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர், 200 முதல் ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்தனர்.
இதேபோல் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டையும் மீறி தெருக்களில் உள்ள கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்தவர்களுக்கு, மானாமதுரை வருவாய்த்துறையினர் 5 ஆயிரம் வரை அபராதம் விதித்து எச்சரித்து கடைகளை அடைத்தனர்.