அடையாளம் தெரியாத கார் மோதி ஓட்ட பயிற்சி மேற்கொண்ட இளைஞர் பலி
மானாமதுரை அருகே ஒட்ட பயிற்சி மேற்கொண்ட இளைஞர் மீது அடையாளம் தெரியாத கார் மோதி பலி. குற்றவாளியை கைது செய்ய கோரி உறவினர்கள் போராட்டம்;
விபத்தில் பலியான இளைஞர் விக்னேஷ்
மானாமதுரை அருகே உடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் விக்னேஸ்வரன் ( 20 ). இவர் இந்திய ராணுவத்தில் சேர்வதற்காக பயிற்சி மேற்கொண்டு வந்தார். இதற்காக மதுரை - ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் ராஜகம்பீரம் அருகே விக்னேஸ்வரன் ஓட்டப் பயிற்சியை மேற்கொண்டிருந்தபோது அந்த வழியாக வேகமாகச் சென்ற அடையாளம் தெரியாத கார் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது .
இந்த விபத்தில் விக்னேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மானாமதுரை நகர் காவல்துறையினர் இச் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விபத்தை ஏற்படுத்திய கார் மற்றும் அதன் ஓட்டுநரை தேடி வரும் நிலையில் அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக மானாமதுரை அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டது.
உடற்கூறு முடிவுற்ற நிலையில் தப்பியோடிய குற்றவாளியை கைது செய்யக்கோரி, விக்னேஷ் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த டிஎஸ்பி சுந்தர மாணிக்கம் உறவினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றார்.