சிவகங்கை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் மூலம் மக்களுக்கு சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரை வழங்கிட ஆட்சியர் அறிவுறுத்தினார்;
சிவகங்கை மாவட்டம், கொம்புக்காரனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், கொம்புக்காரனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில், நாள்தோறும் சிகிச்சைக்கு வெளிநோயாளிகள் சுமார் 80 முதல் 90 வரையிலும், உள்நோயாளிகள் 10 முதல் 20 வரையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குவது குறித்தும்,சிகிச்சை சரியான காலக்கட்டத்தில் வழங்கப்பட்டு வருகிறதா என கேட்டறிந்தார்.
மேலும், மகப்பேறு சிகிச்சைப் பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, மருந்துகள் இருப்பு விவரம் மற்றும் இருப்பு மருத்துவ உபகரணங்கள் தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மேம்படுத்த வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகள், பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், மருத்துவமனைக்கு வருகை புரியும் நோயாளிகளின் சராசரியான எண்ணிக்கை மற்றும் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கர்ப்பிணித் தாய்மார்களின் பரிசோதனை குறித்த பதிவேட்டினைப் பார்வையிட்டு, ஒவ்வொரு மாதமும் கர்ப்பிணித் தாய்மார்களின் நினைவுப்படுத்தி உரியமுறையில் பரிசோதனை மேற்கொண்டு தாயும் சேயும் நலமுடன் வீட்டிற்கு செல்லும் வரை அவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதேபோல், கிராமங்களிலுள்ள வயதானவர்கள் மருத்துவமனைக்கு மருத்துவ சிகிச்சைக்கு வரும் போது, முதலமைச்சரின் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் மூலம் அவர்களுக்கு சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரைகள் வழங்கிட வட்டார மருத்துவ அலுவலருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் ,துணை இயக்குநர் (சுகாதாரம்) மரு.விஜய்சந்திரன் மற்றும் செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.