பருவமழையை கவனத்துடன் எதிர் கொள்ள ஆட்சியர் அறிவுரை:
வடகிழக்குப் பருவ மழையின் காரணமாக அரசால், வகுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்ற மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அறிவுறுத்தல்;
வானிலை ஆராய்ச்சி மையம் முன்னறிவிப்பின்படி, வடகிழக்குப் பருவ மழை காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிக கனமழையும் பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு கீழ்கண்ட முன்னெச்சரிக்கை அறிவுரைகள் வழங்கியுள்ளார் .
1. கனமழை காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்துத் தெரிவிக்க ஏதுவாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டணமில்லா உதவி தொலைபேசி எண் 1077 மற்றும் 04575 - 246233 ஆகியவை 247 இயங்கி வருகின்றன. அவ்வெண்கள் மூலம் பொதுமக்கள் குறைகள் ஏதேனும் இருப்பின் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
2. வீடுகளின் அருகாமையில் மின்கம்பிகள் ஏதும் அறுந்து விழுந்திருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக, தமிழ்நாடு மின் உற்பத்தி (ம) பகிர்மானக் கழக அலுவலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
3. தேவையில்லாமல் மின்கம்பங்களின் அருகே செல்வதையும், மின் கம்பங்களில் கால்நடைகளைக் கட்டி வைப்பதையும், துணிகள் உலர்த்துவதையும் தவிர்க்க வேண்டும்.
4. ஆறு மற்றும் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் குளிக்கச் செல்வதையும், கால்நடைகளை குளிப்பாட்டுவதையும் முழுவதும் தவிர்க்க வேண்டும்.
5. மழைக்காலங்களில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் தனியாக வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
6.இடி மற்றும் மின்னல் ஏற்படும்போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்
என தெரிவித்துள்ளார்.