வருமான வரி செலுத்துவோரை குறி வைத்து நடைபெறும் மோசடி
இந்தியா முழுவதும் வருமான வரி செலுத்து வோரை குறி வைத்து 'டேக்ஸ் ரீபண்டு' என்ற பெயரில் மோசடி நடக்கிறது.
இது போன்ற ஏமாற்று வலையில் சிக்கி விட வேண்டாமென மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் குற்றத்தடுப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
2022-23ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான ஆன்லைன் வசதி கடந்த வாரம் துவங்கியது. ஐ.டி.ஆர் -1, ஐ.டி.ஆர் - 4 படிவங்களை தாக்கல் செய்வதற்கு, வரும் ஜூலை 31ம் தேதி கடைசி நாளாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தற்போது மோசடி பேர்வழிகள், சீசனுக்கு ஏற்றார் போல, தங்களை அப்டேட் செய்து கொண்டு மோசடியில் இறங்கி வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது டேக்ஸ் ரீபண்டு பெயரில் புதிய மோசடி இமெயில், குறுஞ்செய்தியை அனுப்பி வருகின்றனர். அதில் போலி வருமான வரித்துறை இணையதள முகவரியை இணைத்து அனுப்புகின்றனர். வங்கி அல்லது தனிப்பட்ட விவரங்களை தெரியாமல் அளிப்போரிடம் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் பாதுகாப்பு பிரிவு தனது டிவிட்டர் கணக்கில்,'வரி செலுத்துவோரை குறி வைத்து, டேக்ஸ் ரீபண்டு பெயரில் மோசடி பேர்வழிகள் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் அனுப்புகின்றனர். இதுபோன்ற சந்தேகத்திற்குரிய குறுஞ்செய்தி/மின்னஞ்சலில் வரும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம். இந்த மோசடி தொடர்பாக உடனடியாக 1930 என்ற எண்ணுக்கோ, cybercrime.gov.in என்ற இணையதளத்திலோ புகார் அளிக்கலாம். இவ்வாறு கூறியுள்ளனர்.