ஏற்காட்டில் தோன்றிய திடீர் அருவிகள்; சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் பெய்த கனமழையால் ஆங்காங்கே திடீர் அருவிகள் தோன்றி சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-09-04 08:00 GMT

ஏற்காடு அருகே திடீர் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று பெய்த மழையின் காரணமாக ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று மட்டும் ஏற்காட்டில் அதிகபட்சமாக 127 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் ஏற்காடு மலை அடிவாரத்தில் ஆங்காங்கே திடீர் அருவிகள் தோன்றி மழை நீர் அருவி போல் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஆங்காங்கே சுற்றுலாப்பயணிகள் குளியல் போட்டு குடும்பத்துடன் ஏற்காட்டின் அழகை ரசித்து வருகின்றனர்.

கொரானா தொற்று குறைவு காரணமாக தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஏற்காட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தற்போது ஆங்காங்கே திடீர் அருவிகள் தோன்றி உள்ளதால் அதனை ரசிக்க குடும்பம், குடும்பமாக சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ரசிக்கத் தொடங்கி உள்ளனர்.

இன்றும், நாளையும் விடுமுறை தினம் என்பதால் ஏற்காட்டில் அழகைக் காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News