தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த சிலம்ப வீரர்கள்
விளையாட்டு துறைக்கான இட ஒதுக்கீட்டில் சிலம்பத்தை சேர்த்த தமிழக முதல்வருக்கு, சிலம்பம் சுற்றி வீரர்கள் நன்றி தெரிவித்தனர்.;
தமிழக சட்டமன்றத்தில் விளையாட்டு துறை மானிய கோரிக்கையின் போது, தமிழக பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், கல்வி, வேலைவாய்ப்பில் விளையாட்டு துறையில் உள்ள 3 சதவிகித இட ஒதுக்கீட்டில், சிலம்பம் விளையாட்டையும் சேர்த்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தமிழக பாரம்பரிய விளையாட்டுக்கு தமிழக முதல்வர் அளித்த முக்கியத்துவத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சேலத்தில் உள்ள விஸ்வா இலவச சிலம்பாட்ட பயிற்சி பள்ளி மாணவ மாணவியர்கள் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் எஸ் ஆர்.பி. விளையாட்டு மைதானத்தில் ஒன்று திரண்டு சிலம்பம் சுற்றி, தற்காப்பு கலைகளை வெளிப்படுத்தி நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் சிலம்பம் சுற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து வீரர், வீராங்கனைகள் ஒரே மாதிரியாக சிலம்பம் சுற்றியும், பல்வேறு சாகசங்கள் செய்தும், தமிழக முதல்வர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருக்கு நன்றிகளையும் தெரிவித்தனர். இதில் 6 வயது சிறுவர், சிறுமியர்கள் முதல் கல்லூரி மாணவ மாணவியர்கள் வரை பெருமளவில் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாகக் கொண்டாட அறிவிப்பு வெளியிட்டமைக்கும், பெரியாரின் சிலை அமைக்க அனுமதி அளித்தமைக்கும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் அனைவரும் முழக்கங்கள் எழுப்பி தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.