குடும்பத்தகராறில் மனைவியை கொன்ற கணவன்- சேலத்தில் பரபரப்பு
சேலம் அருகே, குடும்பத் தகராறில் கழுத்தறுத்து மனைவியை கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.;
சேலம் மாவட்டம், மன்னார்பாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் கல்பனா (59) - பாஸ்கரன்(62). இவர்களுக்கு மனோஜ் என்ற மகனும், ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி விட்டது.
கல்பனா - பாஸ்கரன் தம்பதிகளுக்கு இடையே நீண்ட காலமாக குடும்பத் தகராறு இருந்து வந்ததாகவும், கடந்த ௨௦௧௭ஆம் ஆண்டில் இருந்து விவாகரத்துக்கு விண்ணப்பித்து, இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
கல்பனா வசித்து வந்த வீட்டின் மாடியிலேயே, பாஸ்கரன் வசித்து வந்துள்ளார். அவருக்கு, உரிய நேரத்திற்கு கல்பனா உணவு கொடுக்காமல், "பணம் தருகிறேன் வெளியே எங்காவது சென்று சாப்பிட்டு கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில், இன்று பிற்பகல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த பாஸ்கரன், வீட்டில் காய்கறிகளை வெட்டுவதற்காக வைத்திருந்த கத்தியை கொண்டு அவரது மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார். மேலும் கை, முதுகு உள்ளிட்ட பகுதிகளிலும் கத்தியால் வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கல்பனா நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த உதவி ஆணையர் ஆனந்தகுமார் தலைமையில் வீராணம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த கல்பனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவரது கணவர் பாஸ்கரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்பத் தகராறில் மனைவியை கணவனே கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.