தடையை மீறி ஏற்காட்டிற்கு வந்த கனரக வாகனங்களை தடுத்து நிறுத்திய போலீஸார்
மண்சரிவினால் சேதமடைந்த சாலை முழுமையாக சீரமைக்கப்படாததால் ஏற்காடு மலைப்பாதையில் கனரக வாகனங்களுக்கு தடை நீடிக்கிறது;
தடையை மீறி ஏற்காட்டிற்கு வந்த கனரக வாகனங்களை போலீசார் அடிவாரத்திலேயே தடுத்து நிறுத்தினர்.
தொடர் மழை காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவிற்கும் 3-வது கொண்டை ஊசி வளைவிற்கும் இடையே கடந்த அக்டோபர் மாதம் மிகப்பெரிய மண்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் தற்காலிகமாக இலகு ரக வாகனங்கள் மட்டும் செல்லும் வகையில் நெடுஞ்சாலை துறையினர் வழிவகை செய்தனர். ஆனால், தற்போது வரை மண்சரிவினால் சேதமடைந்த சாலை முழுமையாக சீரமைக்கப்படவில்லை. இதனால் ஏற்காடு மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை நீடித்து வருகிறது. இதன்காரணமாக, ஏற்காட்டில் உள்ள மலை கிராம மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் தடையை மீறி இன்றைய தினம் கட்டுமான பொருட்களை ஏற்றிக்கொண்டு ஏராளமான கனரக வாகனங்கள் ஏற்காட்டிற்கு அணிவகுத்து வந்தன. அனைத்து கனரக வாகனங்களையும் அடிவாரத்திலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர்.