சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் முற்றுகை

ஏற்காட்டில் அப்புறப்படுத்திய சாலையோர கடைகளை மீண்டும் அனுமதிக்க வேண்டி 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2021-12-27 12:45 GMT

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் குவிவது வழக்கம். அப்போது அண்ணா பூங்கா, படகு இல்ல ஏரி, ஒண்டிக்கடை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனைத் தவிர்க்கும் வகையில் சாலையோர கடைகளை உடனடியாக அப்புறப்படுத்துமாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கடைகள் அகற்றப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்காடு சாலையோர வியாபாரிகள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சாலையோரத்தில் வியாபாரம் நடத்திவரும் தங்களுக்குத் தொடர்ந்து அதே இடத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், தங்களின் வாழ்வாதாரத்தைக் காத்திடும் வகையில் மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வியாபாரிகள் கோரிக்கை மனு வழங்கினர்.

சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த இடையூறும் செய்யாமல் அதே இடத்தில் கடைகளை நடத்தத் தங்கள் தயாராக உள்ளதாகவும் இதற்கு மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்யவேண்டும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News