விபத்தில் கால்கள் உடைந்தும் மகனை நீட் தேர்வுக்கு அனுப்பிய நெகிழ்ச்சி சம்பவம்
சேலம் அருகே விபத்தில் கால்கள் உடைந்தும் மகனை நீட் தேர்வுக்கு அனுப்பிய தந்தையின் நெகிழ்ச்சி சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
விபத்தில் கால்கள் முறிந்த கணேஷ் என்ற மாணவனின் தந்தை காசிவிஸ்வநாதன்.
தமிழகம் முழுவதும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு நீட் தேர்வு இன்று நடைபெற உள்ளது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி நாகரசம்பட்டி பகுதியை சேர்ந்த காசி விஸ்வநாதன் என்பவரின் மகன் நீட் தேர்வு எழுதுவதற்காக சேலம் உடையாப்பட்டி பகுதியிலுள்ள தனியார் பள்ளிக்கு தேர்வு எழுத வந்திருந்தார்.
அப்போது அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டத்திற்குட்பட்ட அரசு பேருந்து ஒன்று விழுப்புரத்தில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது.
உடையாப்பட்டி பகுதியில் பேருந்து வந்தபோது டயர் கழன்று ஓடியது. அப்போது நீட் தேர்வு மையத்துக்கு செல்ல சாலையை கடந்த மாணவர்கள் மீது மோதியது. இதில் இரு மாணவர்கள் லேசான காயத்துடன் தப்பிய நிலையில், மாணவன் கணேஷ் என்பவரின் தந்தை பலத்த காயம் ஏற்பட்டு இரண்டு கால்களும் உடைந்தது.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அம்மாபேட்டை காவல்துறையினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் மாணவனின் தந்தை மாணவனை பார்த்து நன்றாக தேர்வு எழுதும் படியும், எனக்கு ஒன்றும் இல்லை என கண்ணீருடன் கூறினார். இதனையடுத்து மாணவன் கண்ணீருடன் தேர்வு எழுதச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.