ஏற்காட்டில் சாலை வசதியின்றி தொட்டில் கட்டி தூக்கிச் செல்லும் அவலம்
ஏற்காட்டில் சாலை வசதி இல்லாததால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை கிராம மக்கள் தொட்டில் கட்டி தூக்கி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுமார் 60 மலைகிராமங்கள் உள்ளன. இதில் கேடக்காடு மலைக்கிராமத்தில் மட்டும் சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு போதிய சாலை வசதி இல்லாததால் நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட முதயவர் ஒருவரை கிராம மக்கள் தொட்டில் கட்டி தங்கள் தோளில் சுமந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் கொட்டச்சேடு வரை தூக்கி சென்று பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
கேடக்காடு கிராமத்திற்கு தார்சாலை வசதி கேட்டு அப்பகுதி மக்கள் அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை தீர்வு கிடைக்காததால் இதே அவல நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.