சேலத்தில் மழையால் வீடு இடிந்து விழுந்து சிறுவன் பலி: 4 பேர் காயம்
சேலம் வீராணம் அருகே, மழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில், சிறுவன் பலியான நிலையில், 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
சேலம் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. வீராணம் பகுதியிலும் மழை பெய்துள்ளது. வீராணம் அருகே உள்ள அல்லிக்குட்டை பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி நந்தினி. கூலித் தொழிலாளியான இவர், 4 வயது மகன் பாலசபரி, தனது தந்தை ஏழுமலை, தாய் காளியம்மாள், அக்காள் மகள் புவனேஸ்வரி, ஆகியோருடன் நேற்று இரவு வீட்டில் இருந்துள்ளார்.
அல்லிக்குட்டை பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக, இன்று காலை ராமசாமி குடியிருந்த வீடு திடீரென இடிந்து விழுந்தது. இதனால் வீட்டில் இருந்த தாய், தந்தை அக்காள் மகள் என அனைவரும் வீட்டிற்குள் மாட்டிக்கொண்டனர்.அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.
இதில், ராமசாமியின் ஒரே மகன் ராஜசபரி, ஆபத்தான நிலையில் இருப்பதை கண்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் பாலசபரி ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். படுகாயமடைந்த ராமசாமி, ஏழுமலை, காளியம்மாள் மற்றும் புவனேஸ்வரி ஆகிய 4 பேரும் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். சம்பவம் அறிந்த வீராணம் காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் கார்மேகம், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரடியாக சென்று, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். தொடர்ந்து, அவர்களுக்கு தேவையான இழப்பீடுகளை பெற்றுத் தருவதாக உறுதி அளித்தனர்.
உயிரிழந்த பாலசபரி உடல், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தான் ஆசையாக பெற்றெடுத்த ஒரே மகன், வீடு இடிந்து விழுந்ததில் உயிரிழந்ததால், அவரது தாய் கதறி அழுத காட்சி, உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதில் சிறுவனின் தாய் நந்தினி மட்டும், சம்பவம் நடந்த போது அருகில் உள்ள வீட்டிற்கு சென்றிருந்தாதால் அவர் காயமின்றி உயிர் தப்பினார். இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.