சேலத்தில் மேளதாளம் முழங்க மாணவர்களை வரவேற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்கள்
பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களுக்கு மேளதாளம் முழங்க பூக்கள் மற்றும் இனிப்புகளை வழங்கி அரசு பள்ளி ஆசிரியர்கள் வரவேற்றனர்.;
சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து 19 மாதங்களுக்கு பிறகு 1 முதல் 8 ஆம் வகுப்புக்கான பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், 1416 தனியார் பள்ளிகள் என மொத்தமாக 1754 தொடக்க பள்ளி, மற்றும் நடுநிலை பள்ளிகளில் 3 லட்சத்து 79 ஆயிரம் மாணவ மாணவிகள் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இதில் 1416 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் முழுமையாக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் துவங்கியுள்ளது.
குறிப்பாக பள்ளிகளின் நுழைவாயில் முன்பு மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் கிருமிநாசினி, மற்றும் உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதித்தனர். அனைவரும் முககவசம் அணிந்து சமூகஇடைவெளியை கடைப்பிடிக்க வேண்டுமென்று என்று பள்ளிகளில் அறிவுறுத்தப்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மகிழ்ச்சியுடன் வகுப்புகளுக்கு மாணவிகள் வருகை புரிந்தனர்.
குறிப்பாக சேலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பூங்கொத்து மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். இதேபோல் சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மாணவர்களுக்கு ரோஜா பூ மற்றும் இனிப்புகள் கொடுத்து, கிரீடம் சூட்டி வரவேற்றனர். பொம்மலாட்டம் மூலம் மாணவர்களுக்கு தனிமனித இடைவெளி , முக கவசம் அணிதல் உள்ளிட்ட நோய் தொற்று தடுப்பு வழிமுறைகளை செய்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதேபோல் பல்வேறு அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.