காட்டுத் தீ வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்கள் மனு
கோடை காலத்தில் செயற்கையாக காட்டுத்தீயை ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.;
மலைகள் சூழ்ந்த மாவட்டமான சேலத்தில் கோடை காலத்தில் ஏற்படும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் வனத்துறை அலுவலரிடம் இயற்கை ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. குறிப்பாக கோடை காலம் தொடங்கியது முதல் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு காட்டுத்தீ பரவல் அதிக அளவில் இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் ஏக்கர் பரப்பிலான மரங்கள் அரிய வகை மூலிகைச் செடிகள் எரிந்து சாம்பல் ஆவது தொடர் கதையாக உள்ளது.
மேலும் வனம் மற்றும் மலைப் பகுதியில் வாழ்ந்து வரும் விலங்குகள் பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் அழிந்து வருவதாகவும், இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் காட்டுத்தீயை செயற்கையாக பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காட்டுத் தீ பரவலை தடுக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் தீயணைப்பு துறை வனத்துறை மற்றும் அந்தந்த பகுதி பொது மக்களை இணைத்து பாதுகாப்பு குழு அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.