காபி பார் உரிமையாளர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - சேலத்தில் பரபரப்பு

சேலத்தில், காபி பார் உரிமையாளர் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபரை மல்லூர் போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2021-05-05 10:19 GMT

சேலம் அருகே நாழிக்கல்பட்டி பிரிவு ரோடு பகுதியில், லோகநாதன் என்பவர் காபி பார் நடத்தி வருகிறார். நேற்று இரவு காபி பார் முன்பாக, மணிகண்டன் என்பவர் அவரது மனைவியுடன் தகராற்றில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, கடையின் முன்பு தகராறில் ஈடுபட வேண்டாம் என்று லோகநாதன்  கூறியதால், மணிகண்டனுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து மணிகண்டன் சென்றுள்ளார்.

இன்று அதிகாலை 4 மணி அளவில், வழக்கம் போல காபி பாரை திறந்து லோகநாதன், கடையை  சுத்தம் செய்து குப்பையை வெளியே கொட்டுவதற்கு சென்றுள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மணிகண்டன்,  பீர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி பெட்ரோல் குண்டாக மாற்றி,  லோகநாதன் மீது வீசி விட்டு தப்பி சென்றுள்ளார். இதில், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினர். 

இது குறித்து தகவல் அறிந்த மல்லூர் போலீஸார், தப்பியோடிய மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  மணிகண்டன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் ஒன்றிய துணைத் தலைவராக இருந்துள்ளார்.

பல்வேறு தகராறுகளில் தொடர்ந்து ஈடுபட்டதால், அவர் மீது ஏற்கனவே 2 வழக்குகள் உள்ளன. இதன் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அவர் ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News