அரசு பஸ் மோதி முதியவர் பலி - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்
சேலத்தில், அரசு பஸ் மோதி முதியவர் பலியான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
சேலம் அருகே மல்லூர் ஏர்வாடியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது உறவினருக்கு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையைப் பார்க்க கோவிந்தராஜ், தனது இருசக்கர வாகனத்தில் நேற்று சேலம் வந்துள்ளார்.
பின்னர், ஐந்து ரோடு அருகே மெய்யனூர் பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சேலத்தில் இருந்து பவானி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த கோவிந்தராஜ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, பள்ளப்பட்டி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அரசு பேருந்தில் சிக்கி கோவிந்தராஜ் உயிரிழந்த காட்சி, அருகே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த வீடியோ காட்சி, தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.