நீதிமன்ற உத்தரவுப்படி பட்டா வழங்க வலியுறுத்தி மலை கிராம மக்கள் சாலைமறியல்

மூன்று தலைமுறைகளாக வசிக்கும் பகுதியில் நீதிமன்ற ஆணைப்படி பட்டா வழங்ககோரி சேலத்தில் மலைகிராமமக்கள் சாலைமறியல் போராட்டம்

Update: 2022-02-09 09:30 GMT

 நீதிமன்ற உத்தரவுப்படி பட்டா வழங்க வலியுறுத்தி சேலத்தில் கால்நடைகளுடன் சாலைமறியலில் ஈடுபட்ட. மலை கிராம மக்கள் 

மூன்று தலைமுறைகளுக்கு மேலாக வசித்து வரும் பகுதியில் நீதிமன்ற உத்தரவுப்படி பட்டா வழங்க வலியுறுத்தி சேலத்தில் மலை கிராம மக்கள் கால்நடைகளுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி பகுதியை அடுத்து உள்ளது சூரியூர் கிராமம். வனப்பகுதிக்கு இடையில் உள்ள வருவாய் துறை நிலத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளைக் கடந்து வாழ்ந்து வருவதாக கடந்த பல ஆண்டுகளாக கூறி வருகின்றனர்.

கடந்த 40 ஆண்டு காலமாக பட்டா கேட்டு போராடி வரும் இவர்களை அங்கிருந்து காலி செய்யுமாறு சேலம் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தது. ஆனால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த கிராமமக்கள் பட்டா வழங்குவதற்கான சட்டரீதியான உத்தரவை பெற்றனர். இருப்பினும், சூரியூர் மக்களுக்கு இதுவரை பட்டா கிடைக்கவில்லை. மேலும் அவ்வப்போது வருவாய் துறையினர் மற்றும் வனத்துறையினர் காவல்துறையினர் உதவியோடு கிராம மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்வதால் சூரியூர் கிராம மக்கள் வேதனையில் உள்ளனர். நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல் அதிகாரிகள் நடந்துகொள்வதாக குற்றம்சாட்டி, சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு சூரியூர் கிராம மக்கள் ஆடு மாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பாக மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினர். தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக கிராம மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரை சந்திக்க சிலரை அனுமதித்தனர். நீதிமன்ற உத்தரவுபடி சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News