சேலம் அருகே லாரி மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்
சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி அருகே நடந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
சேலம் திருமலைகிரி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி பசுபதி(30). இவரது மனைவி கார்த்திகா(28). இவர்களுக்கு சுபிஷ்(6) என்ற மகனும், திவ்யா(3) என்ற மகளும் உள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே புதுப்பட்டியில் உள்ள பசுபதியின் அக்கா பிரியா வீட்டிற்கு கணவன், மனைவி இருவரும் சென்றுவிட்டு நேற்று மாலை ஊருக்கு திரும்பினர். அப்போது, அவரது அக்கா மகள் மோகப்பிரியாவை(10) உடன் அழைத்து வந்துள்ளார்.
இதையடுத்து சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் சென்றுகொண்டிருந்தபோது, முன்னால் மினி லாரி ஒன்று சென்றது. அந்த மினி லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டு நிறுத்தியுள்ளார்.
இதனால் நிலை தடுமாறிய பசுபதி மோட்டார் சைக்கிளுடன் அந்த மினி லாரி மீது மோதியுள்ளார். இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேரும் நடுரோட்டில் வலது புறமாக விழுந்தனர். அந்த சமயத்தில் நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி சென்ற மற்றொரு லாரி அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் அவர்கள் 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மல்லூர் போலீசார் விரைந்து சென்று இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய லாரியின் டிரைவர் அங்கிருந்து தப்பிஓடிவிட்டார். இதனால் அவர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.