'டிமிக்கி' கொடுத்து தப்பிய டிரைவர் - காரை மட்டும் கண்டுபிடித்த போலீசார்

சேலம் அருகே, பல்வேறு தடுப்புகள் அமைத்து துரத்தி சென்றும் தப்பியச் சென்ற காரை, ஒருவழியாக போலீசார் கண்டுபிடித்தனர்.

Update: 2021-09-22 07:15 GMT

சேலம் அருகே பிடிபட்ட கார்

சேலம் அருகே உள்ள கருப்பூர் சுங்கசாவடியில், அண்மையில் சொகுசு கார் ஒன்று நிற்காமல் அதிவேகமாக சென்றுள்ளது. இதுதொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வழியில் காரை நிறுத்த காவல்துறையினர் முற்பட்டனர். ஆனால்,  காரை நிறுத்தாமல் ஓட்டுனர் அதிகமாக சென்றுள்ளார்.

சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில், பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் வாகனத்தை நிறுத்த முற்பட்டனர். காவல்துறையினர் மீது வாகனத்தை மோதுவது போல் இயக்கி, அங்கிருந்து சொகுசு காருடன் ஓட்டுனர் தப்பி சென்றுள்ளார். பின்னர் காவல்துறை ரோந்து வாகனங்கள் மூலம் பின்தொடர்ந்து சென்றபோதும்,  கார் மாற்று வழியில் சென்று தப்பியது. இதனைத் தொடர்ந்து தப்பி சென்ற காரினை காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில், அமானி கொண்டலாம்பட்டி அருகே உள்ள காட்டூர் கிராமத்தில்,  சந்தேகத்துக்குரிய வகையில் கார் ஒன்று நிற்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து காவல்துறையினர் விசாரித்து, காரை காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். பின்னர்,  வழக்கு விசாரணை, கருப்பூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

காரின் எண்ணை வைத்து சோதனை செய்தபோது, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சோகாராம்  என்பவரின் பெயரில் உள்ளது தெரியவந்தது. உரிமையாளரை தொடர்பு கொள்ளும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். காரில் ஏதாவது கடத்தப்பட்டதா? அல்லது ஏதாவது குற்றச் சம்பவங்களை அரங்கேற்றி விட்டு தப்பி வந்தார்களா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News