திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் சேலம்- சென்னை இடையிலான எட்டு வழிச் சாலை திட்டம் திமுக ஆட்சி வந்தவுடன் நிறைவேற்றப்படாது, சுற்றுச்சூழல் மதிப்பீட்டு வரைவு அறிக்கை 2020 ன் படி நிராகரிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கு எட்டு வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களது மிகுந்த மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் பூலாவரி கிராமத்தைச் சேர்ந்த எட்டு வழிச்சாலை பாதிப்பு விவசாயிகள் இன்று உடனடியாக ஸ்டாலின் அறிக்கைக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்தினர். பூலாவரியில் உள்ள மோகன சுந்தரம் விவசாய தோட்டத்தில் திரண்ட பாதிப்பு விவசாயிகள் திமுக தேர்தல் அறிக்கைக்கு நன்றி தெரிவித்து நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்தினர்.
அதில் எட்டு வழி சாலை திட்டம் நிராகரிக்கப்படும் என்று அறிவித்த ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபடுவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனிடையே தேர்தல் அறிக்கை மகிழ்ச்சி அளித்துள்ளது என்பதை வெளிப்படுத்தும் வகையில் கேக் வெட்டி, ஒருவருக்கு ஒருவர் ஊட்டிக் கொண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து எட்டு வழிச்சாலை பாதிப்பு விவசாயிகள் கூறும்போது கடந்த 3 ஆண்டுகளாக தங்கள் நிலத்தை பாதுகாப்பதற்காக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தோம். விவசாயி என்று கூறிக் கொள்ளும் தமிழக முதல்வரை சந்திக்க பலமுறை முயற்சி மேற்கொண்டும் சந்திக்க முடியவில்லை. மாறாக காவல்துறையினரால் விரட்டியடிக்கப்பட்டோம்.
இந்த நிலையில் திமுக தலைவர், தான் ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளை பாதிக்கும் எட்டு வழிச்சாலை திட்டத்தை நிராகரிப்பேன் என்று கூறியுள்ளார். இது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மூன்று ஆண்டுகளாக தூக்கமின்றி தவித்த தங்களுக்கு வயிற்றில் பால் வார்த்துள்ளது. எனவே திமுக வெற்றி பெற அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபடுவோம் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றவுடன் எட்டு வழி சாலை திட்டத்தை ரத்து செய்வார் என்று நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தனர்.