கொரோனா இறப்பு வதந்தியா?... எச்சரிக்கும் சுகாதாரத்துறை செயலாளர்!
கொரோனா இறப்பு வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.;
சேலம் அரசு மருத்துவமனை மற்றும் இரும்பாலையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா தொற்று அதிகரித்து பின்னர் குறைந்து வருகிறது. அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கை பொதுமக்கள் முழுமையாக கடைப்பிடித்தால் இந்நோய் தொற்று பாதிப்பு மேலும் குறையும் என்றார்.
தமிழகத்தில் இந்நோய் பாதிக்கப்படுபவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கும் வகையில் பரிசோதனை ஆய்வகங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த அவர் 3வது அலை 4வது அலையை எதிர்கொள்ள தேவையான மருத்துவ கட்டமைப்பை உருவாக்க மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு 1,790 மருந்து குப்பிகளை அனுப்பி உள்ளதாகவும், மத்திய அரசு ஏற்கனவே அனுப்பிய 13.1 லட்சம் கொரோனா தடுப்பூசி அடுத்த இரு தினங்களில் முடியும் தருவாயில் உள்ளதால் கூடுதல் தடுப்பூசிகளை மத்திய அரசிடம் கேட்டுள்ளதாகவும் கூறினார்.
தனியார் மருத்துவமனைகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்த அவர், பணம் சம்பாதிக்கும் நோக்கில் தனியார் மருத்துவமனைகள் செயல்படக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டார். கொரோனா இறப்பு குறித்து யாரேனும் வதந்தி பரப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.