அண்ணனை சுட்டுக் கொன்ற தம்பி: காவல்துறை விசாரணை
சேலம் அருகே தம்பியே அண்ணனை சுட்டுக் கொன்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் தம்பியை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி புத்தூர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த பெரியதாயி என்பவருக்கு நான்கு மகன்கள் 5 மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் செல்வம்(43) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு தற்போது வேடுகாத்தாம்பட்டியில் மனைவி ரேவதி மற்றும் ஒரு மகன் 2 மகள்களுடன் வசித்து வருகிறார்.
வெள்ளி கூலித் தொழில் செய்து வரும் செல்வம் அவ்வப்போது புத்தூர் பகுதிக்கு வந்து தனது தாயாரைச் சந்தித்து செல்வது வழக்கம். அவ்வாறு இன்று காலை 8.30 மணிக்கு செல்வம் தாயாரைச் சந்தித்து விட்டு அவரது வீட்டில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது, எதிர் வீட்டில் இருந்து ஜன்னல் வழியாக அவரது தம்பி சந்தோஷ் (35) செல்வத்தை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
செல்வத்திற்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு இருந்து வருவதாகவும் செல்வத்தின் மனைவி ரேவதி சந்தோஷ் உடன் அடிக்கடி போனில் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து செல்வம் மனைவியை கண்டித்தும் வந்துள்ளார். இதனால் மனைவி மற்றும் கணவருக்கு இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இந்த கொலை நடந்ததா இல்லை அண்ணன் தம்பி இடையே புத்தூர் பகுதியில் இருக்கும் ஐந்து சென்ட் நிலம் தொடர்பாக நிலவி வந்த சொத்து பிரச்சினை காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்து இருக்கலாம் எனவும் முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. கூலி வேலை செய்துவரும் சந்தோஷ் பயன்படுத்திய நாட்டு துப்பாக்கி எங்கிருந்து பெறப்பட்டது, கள்ளத்தனமாக பதுக்கி வைத்து எதற்கெல்லாம் பயன்படுத்தி வந்தார் என்பது குறித்து காவல்துறையினர் சந்தோசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பியே அண்ணனை சுட்டுக் கொன்ற சம்பவத்தால் வேதனையில் ஆழ்ந்துள்ளனர் அவரது குடும்பத்தினர்.