சேலத்தில் கனிம வளத்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை
சேலத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு நெருக்கமான, கனிம வளத்துறை அதிகாரி வீட்டில், லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வருகிறது.;
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் வீடு உட்பட சென்னை, சேலம், தர்மபுரி உள்ளிட்ட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார், இன்று அதிகாலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். 11.32 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கே.பி. அன்பழகன்,அவரது மனைவி,மகன்கன்,மருமகள் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சோதனையின் ஒரு பகுதியாக, சேலம் இரும்பாலை அருகே ராசி நகர் பகுதியில் வசித்து வரும் கரூர் கனிமவளத் துறை உதவி இயக்குனர் ஜெயபால் என்பவர் வீட்டில், லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வருகிறது. லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி கிருஷ்ணராஜ் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர், காலை 6 மணி முதல், சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு முன்பாக ஜெயபால், தர்மபுரியில் பணியாற்றிய போது, முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு பல்வேறு வகையில் உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அன்பழகனுக்கு மிகவும் நெருக்கமாக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.