கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை
நிச்சயம் செய்த பெண்ணை வேண்டாம் என மகன் சொன்னதால் மனமுடைந்து பெற்றோர் தற்கொலையா என போலீசார் விசாரணை.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ளது புளியம்பட்டி. இங்குள்ள ஈசன் ஆசாரி தெருவை சார்ந்தவர் தங்கமணி (59). இவரது மனைவி ரத்னா (48). விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வந்த இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இரண்டு மகள்களுக்கும் ஏற்கனவே திருமணமாகிவிட்டது. மகன் இராஜாஅண்ணாமலை (25) எம்.பி.ஏ முடித்துவிட்டு, சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
மகன் திருமணத்திற்காக பெற்றோர்கள் வரண் தேடிவந்தனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மகுடஞ்சாவடியில் உள்ள பெண் ஒருவரை தங்கள் மகனுக்கு திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்யதுள்ளனர்.
பின்னர் இராஜாஅண்ணாமலை அவருக்கு நிச்சயம் செய்த பெண்ணுடன் அவ்வப்போது தொலைபேசியில் பேசிவந்ததாகவும், தற்போது அந்த பெண்ணை தனக்கு பிடிக்கவில்லை, திருமணம் வேண்டாம் என பெற்றோரிடம் சொல்லியதாகவம் கூறப்படுகின்றது.
இதனிடையே, ஏன் பெண் பிடிக்கவில்லை? நல்ல முடிவாக சொல்லுங்கள் என்று பெண் வீட்டார் வந்து நியாயம் கேட்டு சென்றுள்ளனர். ஆனால் இராஜாஅண்ணாமலை திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு தங்கள் வீட்டிலுள்ள தறி கூடத்தில், ஃபேன் போடும் ஊக்கில் விசைத் தறியில் பயன்படுத்தும் கயிற்றால் தனித்தனியாக தூக்கு போட்டு இறந்துள்ளனர்.
விடியற்காலை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை செய்து, இறந்த இருவரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.
திருமணம் நிச்சயம் செய்த பெண்ணை வேண்டாம் என மகன் சொன்னதால் மனமுடைந்து பெற்றோர் தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது வேறு காரணமா என மகுடஞ்சாவடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.