சங்ககிரி பகுதியில் தீரன்சின்னமலை சிலை : உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி
சங்ககிரி பகுதியில் தீரன் சின்னமலை சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
தீர்த்தகிரி என்ற இயற்பெயர் கொண்ட தீரன் சின்னமலை ஈரோடு மாவட்டம் காங்கேயம் பகுதியில் 1756-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி பிறந்தார். கிழக்கிந்திய கம்பெனி படையினர் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க பல்வேறு கட்டங்களாக போர் புரிந்து வந்த இவர், சூழ்ச்சி மூலம் கைது செய்யப்பட்டு, சங்ககிரி கோட்டையில் 1805-ம் ஆண்டு ஆடிப்பெருக்கு அன்று தூக்கிலிடப்பட்டார்.
அவரை பெருமைப்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் ஆடிப்பெருக்கு தினத்தன்று நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி சேலம் மாவட்டம் சங்ககிரி மலைக்கோட்டையில், தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட இடத்தில், அவரின் திருவுருவப் படத்திற்கு தமிழக அரசு சார்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் உணவு துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து எம்.பி. சின்ராஜ், சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பள்ளிப்பாளையம் பிரிவு சாலையில் உள்ள தீரன் சின்னமலை மணிமண்டபத்தில், உள்ள அவரது நினைவு சின்னத்திற்கும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து செய்தியாளரிடம் பேசிய மாநில உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருவதாகவும் அவருடைய நினைவை போற்றும் வகையில் சங்ககிரி பகுதியில் தீரன் சின்னமலைக்கு சிலை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று சங்ககிரியில் தீரன் சின்னமலைக்கு சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சங்ககிரி மலைக்கோட்டை பராமரிப்பு தொடர்பான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.