சேலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் காரணமாக நுங்கு விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. தற்போது மார்ச் மாதத்திலேயே அதிக அளவு உச்சத்தில் வெயில் காணப்படுவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர தயங்குகின்றனர்.
இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் தர்பூசணி பழங்கள் , குளிர்பானங்கள் போன்றவற்றை நாடுவதோடு இயற்கை கொடையான நுங்கை அதிக அளவில் நுகரும் வாய்ப்பு பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சேலத்தில் நுங்கு விற்பனை களை கட்ட தொடங்கியுள்ளது. ஆங்காங்கே குவியல் குவியலாக கொட்டி வைக்கப்பட்டுள்ள நுங்குகளை விற்பனை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
அதனை வாங்குவதிலும் பொதுமக்கள் ஆர்வம் செலுத்துகின்றனர். நுங்கு விலை சற்று அதிகமாக இருந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வாங்கி செல்வதையும் பார்க்க முடிகிறது. இதேபோல் சேலத்தில் தர்பூசணி, கரும்புச்சாறு, உள்ளிட்ட பொருட்கள் விற்பனையும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.