உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்பு வெள்ளி ஆபரணங்கள் பறிமுதல்
சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட, 20 லட்சம் மதிப்பிலான வெள்ளி ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவ்வப்போது திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். அவ்வகையில், சேலம் ஜங்ஷன் ரயில்வே நிலையம் ஐந்தாவது பிளாட்பாரத்தில் ஆய்வாளர் அரவிந்த் குமார் தலைமையில் ரயில்வே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது, எர்ணாகுளம் சிறப்பு ரயிலில் இருந்து வந்து சுரங்கப் பாதையில் செல்வதற்கான வழியில் சந்தேகப்படும்படியான இரண்டு பேர் பைகளுடன் இருந்ததை கண்டு விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர்கள் வைத்திருந்த பையில் வெள்ளி பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
மேலும், அவற்றுக்கான ஆவணங்கள் இல்லை என்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து 28.9 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், இது சம்பந்தமாக வெள்ளிப் பொருட்களை எடுத்து வந்த சேலம் பென்ஸனர் லைன் பகுதியை சேர்ந்த ஜாபர் உசேனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிடிபட்ட வெள்ளியின் மதிப்பு சுமார் 20 லட்ச ரூபாய் இருக்கும் என ரயில்வே பாதுகாப்புப்படை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.