விவசாய போராட்டத்தில் கலந்துகொள்ள சேலத்திலிருந்து விவசாயிகள் டெல்லி பயணம்
டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சேலத்திலிருந்து 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, டெல்லியில் கடந்த 9 மாத காலமாக விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அமைப்பினர் மற்றும் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இன்று தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் 2,000 விவசாயிகள் டெல்லி நோக்கி பயணம் மேற்கொண்டனர்.
இதன் ஒருபகுதியாக சேலத்தில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் சேலம் ஜங்சன் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலம் டெல்லி நோக்கி புறப்பட்டனர். தமிழகத்திலிருந்து செல்லும் விவசாயிகள் ஆகஸ்ட் 5 முதல் 11ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தனர். முன்னதாக ஜங்ஷன் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.