சேலத்தில் நாளை முதல் வீட்டுக்கே வரும் மளிகைப்பொருட்கள்: மாநகராட்சி அனுமதி!
சேலத்தில், நாளை முதல் மளிகைப்பொருட்களை வீடுகளில் வழங்க திட்டம் அமலுக்கு வருகிறது; இதற்கென 5,000 வியாபாரிகளுக்கு மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது.;
தமிழகத்தில், கொரானா பரவல் காரணமாக வரும்ம் ஏழாம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவை அரசு நீட்டித்துள்ளது. இந்நிலையில் மளிகை பொருட்களை விற்பனை செய்வதற்கு பல்வேறு தளர்வுகளை சேலம் மாநகராட்சி ஏற்படுத்தி உள்ளது. அதன்படி, நாளை முதல், மொத்த வியாபாரிகள் பொதுமக்களுக்கு அவர்கள் விரும்பும் பொருட்களை நேரடியாக வீட்டுக்கே சென்று வினியோகம் செய்யலாம்.
சேலம் மாநகராட்சி பகுதியில், 5000க்கும் மேற்பட்ட வியாபாரிகள் உரிமம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு வீடுகள்தோறும் சென்று பொருட்களை வழங்க மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. காலை 7 மணி முதல், மாலை 6 மணி வரை மளிகை பொருட்களை விநியோகம் செய்ய நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
சில்லரை வியாபாரிகள், தங்கள் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு கடைகளை முழுவதுமாக திறப்பதற்கு பதில் பக்கவாட்டு கதவு அல்லது பின்பக்க வாயிலாக பொருட்களை எடுத்துச் சென்று வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யலாம். கடையில் இருந்து பொதுமக்களுக்கு மளிகை பொருட்கள் வினியோகம் செய்ய மாநகராட்சி மற்றும் நகராட்சி பேரூராட்சிகளில் லைசென்ஸ் பெற்றவர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது.
கடைக்காரர்கள், தொலைபேசி எண்கள் மாநகராட்சியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த கடைக்காரர்களின் பெயர், அவர்களது செல்போன் வாட்ஸ் அப் நம்பர் போன்ற முழு விபரங்களும் அந்த இணையதளத்தில் பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
சேலத்தில் உள்ள மொத்த உணவு தானிய மளிகை கடைகளை திறக்க, அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் நடமாடும் காய்கறி வண்டிகள் தற்போது வீதிகளில் சென்று விற்பனை செய்து வருகின்றனர். இவர்களும் மளிகை பொருட்களை விற்பனை செய்யலாம் என்றும் அனுமதி வழங்கியுள்ளது.
வீட்டு வாசலுக்கு சென்று பொருட்களை விற்பனை செய்யும்போது அனைவரும் முக கவசம் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வகையில் நடந்துகொள்ள வேண்டும் என்றும் மீறுவோர் மீது பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.