புதிய அரசிடம் எதிர்பார்ப்பது என்ன? மாஜி அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி

கொரோனா 2வது அலையில் இருந்து மக்களை, புதிய அரசு காக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக, முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-04 14:46 GMT

சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் சந்தித்து வருகின்றனர். அவ்வகையில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார். 

சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது: தலைமை ஏற்று மக்களுக்கு சேவையாற்றலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து சேவையாற்ற கூடிய தீர்ப்பை, மக்கள் வழங்கியுள்ளனர். தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பு இன்னும் அவர்களது எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகவில்லை என்பதையே  உணர்த்துகிறது.

கொரோனா முதல் அலையில் இருந்து தமிழக மக்களை எடப்பாடி பழனிசாமி காப்பாற்றினார். ஆனால் தற்போது தீவிரமடைந்து வரும் கொரோனா இரண்டாவது அலையில் இருந்து மக்களைக் காக்க,  தமிழகத்தில் புதிதாக அமையவுள்ள அரசும், எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து சேவையாற்ற வேண்டும்.

தமிழகத்தில் நடந்த ஐந்து முனைப்போட்டியில் மூன்று கட்சிகளை மக்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளனர். ஆகையால் அதிமுகவுக்கு பெரும்பான்மை வெற்றி கிடைக்காததற்கு வேறு எந்த கட்சியையும் காரணம் சொல்ல முடியாது  என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News