அதிமுக நடத்தும் போராட்டத்திற்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு: அர்ஜுன் சம்பத்
திமுக அரசை கண்டித்து அதிமுக நடத்தும் போராட்டத்திற்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளதாக அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.;
இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத்.
இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாளைய தினம் ஒகேனக்கல்லில் இந்து மக்கள் கட்சி சார்பில் காவிரிமாதா வழிபாடு நடைபெற உள்ளதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து பாப்பாரப்பட்டியில் சுதந்திர போராட்ட வீரர் சுப்ரமணிய சிவாவின் குருபூஜையில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசும்போது, தமிழக நதிகளை காப்பதற்காக 950 கோடி ரூபாயை ஒதுக்க நாடாளுமன்றத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் எழுத்துபூர்வமான பதிலை வழங்கி உள்ளார். இது தமிழகத்திற்கு கிடைத்துள்ள வரப்பிரசாதம். நெல்லை, கோவை, சென்னை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நதிகளை பாதுகாக்க இதனை தமிழக அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களில் மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்காமல், மத்திய அரசுடன் இனக்கமாக செயல்பட்டு தமிழக வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றார்.
ஜார்ஜ் பொன்னையா, அவர் பேசிய பேச்சுக்காக தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கிறிஸ்துவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சர்ச்சுகள் தீர்மானிக்கிறது. ஆயர்கள் பேரவையின் கருத்து என்ன. சர்ச்சுகள் மதவழிபாட்டிற்காக பயன்படுத்த வேண்டும். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை பாதிரியார் சொல்வது என்றால், ஒட்டு மொத்த கிறிஸ்துவர்களையும் அரசியல் நடவடிக்கைகள் மூலமாக கிறிஸ்துவ மத நிறுவனங்கள் கட்டுப்படுத்துவது என்பது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது.
சர்ச்சுகளிலே அரசியல் தீர்மானிக்கப்படுவது என்பது மதசார்பற்ற தன்மைக்கு ஆபத்து. கிறிஸ்துவ நிறுவனங்கள் இது தொடர்பாக பதிலளிக்க வேண்டும், முதலமைச்சர் கிறிஸ்துவ சபைகளை அழைத்து பேசவேண்டும் மற்றும் தேர்தல் ஆணையம் இந்த விசயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.