ஹெல்மெட் போடலைன்னா எத்தனை தடவைன்னு கேமரா எண்ணும் : புள்ளிங்கோ கவனத்திற்கு..
சேலம் 5 ரோட்டில் 27 முறை ஹெல்மெட் போடாமல் டூ வீலர் ஓட்டிய வாலிபரை கேமரா காட்டி கொடுத்ததால் போலீசாரிடம் சிக்கினார்.;
சேலம் 5 ரோட்டில் 27 முறை ஹெல்மெட் போடாமல் டூ வீலர் ஓட்டிய வாலிபரை கேமரா காட்டி கொடுத்ததால் போலீசாரிடம் சிக்கினார்.
தழகத்தில் முதன்முறையாக கேமரா மூலம் ஹெல்மெட் அணியாமல் செல்வோரை கண்டுபிடித்து அபராதம் விதிக்கும் ஆட்டோமேட்டிக் கேமரா சேலம் 5 ரோட்டில் உள்ள ஈரடுக்கு மேம்பாலத்தில் அமைக்கப்பட்டது.
இங்கு 20 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கேமரா இவ்வழியாக ஹெல்மெட் அணியாமல் செல்வோரை படம் பிடித்து, அவர்களது செல்போனுக்கு மெசேஜ் அனுப்பிவிடும். இந்த கேமரா கடந்த டிசம்பர் மாதம் முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. கடந்த 3 மாத அளவில் 40ஆயிரத்து 815 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் 4 ஆயிரத்து 72 பேர் மட்டுமே அபராதம் செலுத்தியுள்ளனர். இந்நிலையில் இந்த நவீன கேமரா வேலை செய்யவில்லை எனவும், அவ்வாறு அபராதம் விதித்தால் யார் கட்டுவார்கள்? என்ற எண்ணத்தில் பைக் ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் சென்று வந்தனர்.
இந்நிலையில் ஒரே நபர் 27 முறை அவ்வழியாக ஹெல்மெட் அணியால் சென்று வந்தது தெரியவந்தது. போலீசார் அவரது வண்டி எண், வீட்டு முகவரியை வைத்து பார்த்ததில், அவரது பெயர் தங்கராசு என்பதும் தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது ஹெல்மெட் அணியாமல் சென்றதும், தனக்கு வரும் மெஜேசை கண்டு கொள்ளாமல் விட்டதாகவும் தெரிவித்தார். இதையடுத்து 27 முறை ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக 2,700 அபராதம் செலுத்தினார்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ' நவீன தொழில்நுட்ப ஆட்டோமேட்டிக் கேமரா மூலம் ஹெல்மெட் போடாதவர்களை கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்யப்படுகிறது. சுமார் 38 ஆயிரம் பேர் அபராதம் செலுத்தாமல் இருக்கிறார்கள். இதற்காக 10 பேர் கொண்ட போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தினமும் 200 பேருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிப்பார்கள். எனவே ஹெல்மெட் அணியாமல் சென்று வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் அபராதத் தொகையை செலுத்தியே ஆக வேண்டும். அவர்கள் தப்பிக்க முடியாது.' என்று தெரிவித்தார்கள்.