புதிய ஹால்மார்க் விதிகளுக்கு எதிர்ப்பு: நகை வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்
தமிழகத்தில் சுமார் 35 ஆயிரம் கடைகளும், சேலம் மாவட்டத்தில் ஆயிரம் கடைகளும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
புதிய ஹால்மார்க் விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் தங்க நகை வணிகர்கள் மூன்று மணிநேரம் கடைகளை அடைத்து அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய ஹால்மார்க் விதியான HUID தரக்கட்டுப்பாடு கடந்த ஜூன் மாதம் 16 -ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நகை விற்பனையாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும் இந்த புதிய ஹால்மார்க் விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் சுமார் 35 ஆயிரம் கடைகளும், சேலம் மாவட்டத்தில் ஆயிரம் கடைகளும் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த புதிய விதிமுறைகளை அமல்படுத்தியதால், நகை உற்பத்தி செய்து, விற்பனை செய்வதற்கு கால தாமதம் ஏற்படுவதாக, தங்க நகை வணிகர்கள் தெரிவிக்கின்றனர். புதிய தரநிர்ணயத்தை வரவேற்பதாகவும், ஆனால் அதில் இருக்கக் கூடிய நடைமுறை சிக்கல்களை நீக்க, மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு தங்கம், வெள்ளி நகை வணிகர்கள் சங்கத் தலைவர் ஸ்ரீராம் கோரிக்கை விடுத்துள்ளார்.