சேலம் அசைவ உணவகங்களில் அதிகாரிகள் சோதனை: தரமற்ற இறைச்சி பறிமுதல்

சேலத்தில் உள்ள அசைவ உணவகங்களில், உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி, 40 கிலோ தரமற்ற இறைச்சியை பறிமுதல் செய்தனர்.;

Update: 2021-09-13 10:45 GMT

சேலத்தில் உள்ள அசைவ உணவகங்களில், சோதனை மேற்கொண்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பிரியாணி சாப்பிட்ட லோஷினி என்ற சிறுமி உயிரிழந்தது, தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் எதிரொலியாக, சேலத்தில் உணவு பாதுகாப்பு ஆணையாளர் உத்தரவின்பேரில், ஓட்டல்களில் தரமற்ற முறையில் பதப்படுத்தி வைத்திருக்கும் இறைச்சிகளை கண்டறிய, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கதிரவன் தலைமையில், திடீர்  சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல்வேறு கடைகளில் தரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த 40 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கதிரவன் கூறும்போது, அசைவ உணவகங்களில்  பல்வேறு நிறங்களில் உள்ள இறைச்சிகள் தயாரித்தல், இறைச்சியை தொடும்போதும் கைகளில் வண்ணங்கள் ஒட்டுவது போன்றவற்றை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதுபோன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது வயிற்று உபாதைகள் ஏற்படும், பிற்காலத்தில் பல்வேறு பிரச்சினைகள் வருவதற்கும் வாய்ப்புள்ளது என்றார்.

உணவகங்களில், உணவிற்கு நிறங்களை பயன்படுத்துவதற்கு அனுமதி இல்லை. அவ்வாறு பயன்படுத்தினால் அது பாதுகாப்பற்ற உணவாகவே கருதப்படும். எனவே இதுபோன்ற உணவுகளை பொதுமக்கள் தவிர்த்துக் கொள்ளுமாறு, கதிரவன் வேண்டுகோள் விடுத்தார்.

Tags:    

Similar News