அதிமுகவுக்கு ஆதரவு: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக தமிழக விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.;
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரக் கூடிய சூழ்நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சின்னசாமி சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.
கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கான திட்டங்கள், அதிமுக அரசு விவசாயத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம், டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவித்தது, காவிரி, குண்டாறு, வைகை இணைப்பு திட்டம், அத்திகடவு அவினாசி திட்டம் போன்றவற்றை வரவேற்கும் விதமாக தங்களது ஆதரவை அதிமுக கூட்டணிக்கு வழங்கியுள்ளதாக சின்னசாமி தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் 24 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் தங்களது சங்கம் அதிமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் எனவும் கூறினார்.