காவல் ஆய்வாளரை மிரட்டிய பாமக எம்.எல்.ஏ.,வின் ஆடியோவால் பரபரப்பு

சேலம் இரும்பாலை காவல் ஆய்வாளரை மிரட்டி பாமக எம்.எல்.ஏ. பேசிய ஆடியோ வைரலானதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-09-25 10:00 GMT

பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள்.  

சேலம் இரும்பாலை காவல் நிலைய ஆய்வாளராக சந்திரகலா என்பவர் பணிபுரிந்து வருகிறார்.  இவருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு இருந்து வந்தது.  

இரும்பாலை பகுதியைச் சேர்ந்த வயதான தம்பதியர்களின் நிலத்தை எழுதி வாங்கும் முயற்சியில் பாமகவினர் சிலர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக  தம்பதிகள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டார்.  விசாரணையில் வயதான தம்பதிகளுக்கு நிலத்தை விற்பனை செய்ய விருப்பம் இல்லாத நிலையில், பாமகவினர் நிலத்தை கொடுக்குமாறு வற்புறுத்தி வருவது தெரியவந்தது.

இதனையடுத்து பாமகவினரை காவல் ஆய்வாளர் எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாமகவினருக்கும் காவல் ஆய்வாளருக்கும் இடையே மோதல் வெடித்தது. இது குறித்து பாமக நிர்வாகிகள் சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருளிடம்  புகார் தெரிவித்தனர்.  

கடந்த மாதம் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்த அருள், தொலைபேசி மூலம் இரும்பாலை காவல் ஆய்வாளரை மிரட்டி, நீங்கள் பாமகவினர் யாரையும் மதிப்பதில்லை. உங்கள் மீது சட்டமன்றத்தில்  கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசப் போவதாக மிரட்டியதால், பொறுமை இழந்த ஆய்வாளர் தொலைபேசியை துண்டித்தார்.

பின்னர் பாமக சட்டமன்ற உறுப்பினர், இரும்பாலை காவல் ஆய்வாளர் மீது சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இருவரும் பேசிக்கொண்ட ஆடியோ தற்போது வெளியாகி, சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இது  குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஆய்வாளரை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News