தேர்தல் அறிவிப்புக்கு பின்னரும் கலெக்டர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருக்கிறார்
தேர்தல் அறிவிப்புக்கு பின்னும் கலெக்டர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருக்கிறார் என்று தி.மு.க குற்றம் சாட்டியுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட சேலம் கலெக்டர் ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுகிறார் என மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்வகணபதி குற்றச்சாட்டி உள்ளார்.
திமுக சார்பில் திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். இதில் சேலம் மேற்கு மாவட்டம் சார்பில் திரளானோர் பங்கேற்க மேற்கு மாவட்ட நிர்வாகிகளின் அவசர செயற்குழு கூட்டம் கலைஞர் மாளிகையில் இன்று நடைபெற்றது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு மாவட்ட அமைப்பாளர்கள் செல்வகணபதி, ' தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அன்றைய தினமே முதலமைச்சரின் சொந்த தொகுதியான எடப்பாடி தொகுதியில் அரசு நிர்வாகத்தின் உதவியோடு வாக்காளர்களுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கியுள்ளதாகவும், இது தொடர்பாக கலெக்டரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் கலெக்டர் மெத்தனமாக உள்ளார்.
மேலும் கொரோனா பாதிப்பால் நடைபெறவுள்ள தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தபால் ஓட்டு போடும் வகையில் படிவம் 12 ஐ தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதனை பயன்படுத்தி ஆளும் கட்சியினர் வெற்றிபெற சதி செய்கின்றனர். ஆகவே, கட்சி நிர்வாகிகள் கள ஆய்வு மேற்கொண்டு தபால் ஓட்டில் முறைகேடு நடக்காமல் தடுக்க வேண்டும்.
மேலும் சேலம் மாவட்டத்தில் தேர்தல் நியாயமாக நடக்க 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும். ஆளும்கட்சியினருக்கு ஆதரவான போக்கை ஆட்சியர் கைவிட வேண்டும். இல்லையெனில் சட்ட நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.