சேலம் ரயில் நிலையத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு; பயணிகளுக்கு முகக்கவசம் வழங்கல்

சேலம் ரயில் நிலையத்தில் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டு பயணிகளுக்கு முகக்கவசங்களை வழங்கினார்.

Update: 2021-08-01 03:15 GMT

சேலம் ரயில் நிலையத்தில் சிறுமிக்கு முகக்கவசம் அணிவித்த மாநகராட்சி ஆணையர்.

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில்,  பொது இடங்களுக்கு வருகை தரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.

மேலும், கடைகள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் பணிபுரியும் இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என பல்வேறு நிலைகளில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அதே போன்று, இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போதும் பேருந்துகள், ரயில்களில் பயணம் செய்யும்போதும் கட்டாயம் முகக்கவசம் அணிந்துதான் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இன்று மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், சேலம் ஜங்சன் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், ரயிலில் இருந்து இறங்கி வெளியில் வரும் பயணிகள், ரயிலில் பயணம் செய்வதற்காக காத்திருப்போர் அறையில் உள்ள பயணிகள் மற்றும் அங்குள்ள பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வருகிறார்களா என்பதை ஆய்வு செய்தார்.

அப்போது சில பயணிகள் முகக்கவசம் அணியாமல் வந்தனர். அவர்களிடம் சென்று முகக்கவசம் அணிவதன் அவசியத்தை எடுத்துக் கூறி அவர்களுக்கும் முகக்கவசத்தை வழங்கினார். அதே போன்று சிறுவர்களும் முகக்கவசம் அணியாமல் வருவதை அறிந்து அவர்களுக்கும் முகக்கவசத்தை அவரே அணிவித்து கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் குறித்து சிறுவர்களிடம் எடுத்துக்கூறி அவசியம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News