சேலத்தில் கிறிஸ்தவ மயான பிரச்சனை: இருதரப்பினரிடையே போலீசார் சமரசம்
சேலத்தில் கிறிஸ்தவ மயான பிரச்சனை தொடர்பாக இருதரப்பினரிடையே மோதல் ஏற்படாமல் போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
சேலம் நான்குரோடு அருகே கிறிஸ்தவர்களுக்கு சொந்தமான மயானம் ஒன்று உள்ளது. 1930ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்த மயானம் கிறிஸ்தவ மக்கள் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டது. பல ஆண்டு காலமாக பயன்பாடற்று புதர் மண்டி கிடந்த இந்த மயானம் தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சேலம் இரும்பாலை பகுதியைச் சேர்ந்த ஒருவரின் சடலத்தை இந்த மயானத்தில் அடக்கம் செய்வதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனையறிந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், குழி தோண்ட வந்த பொக்லின் வாகனத்தை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். மேலும், மயானத்திற்கு செல்லும் வாயிலை அடைத்தனர். இதனால் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கும், ரோமன் கிறிஸ்தவர்களுக்கும் இடையே பிரச்னை எழும் சூழல் உருவானது.
இதுகுறித்து தகவலறிந்த பள்ளப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பிரச்னைக்குரிய மயானம் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு சொந்தமானது என்பதால் ரோமன் கிறிஸ்தவர்கள் இதை பயன்படுத்தக் கூடாது என்று ஒரு தரப்பினர் கூறினர்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பொதுவாக கிறிஸ்தவர்களுக்காக இந்த மயானம் ஒதுக்கப்பட்டதாகவும், இதைப் பயன்படுத்திக்கொள்ள தங்களுக்கும் உரிமை உள்ளது என்று மற்றொரு பிரிவினரும் வாதங்களை முன் வைத்தனர்.
முறையாக புகார் அளித்தால் இதுகுறித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்று கூறிய காவல்துறையினர் அதுவரை சடலங்களை இந்த மயானத்தில் அடக்கம் செய்ய முயற்சிப்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.