கவர்ச்சிகர அறிவிப்புகள்: 100 கோடிக்கு மேல் மோசடி

சேலத்தில் போலி நிறுவனம் நடத்தி 100 கோடி ரூபாய் அளவில் மோசடியில் ஈடுபட்ட தந்தை மகன் இருவர் கைது.;

Update: 2021-03-19 02:20 GMT

சேலத்தில் போலி நிறுவனம் நடத்தி 100 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட தந்தை மகன் இருவர் கைது. மகள் மற்றும் மருமகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சேலம் அழகாபுரம் அருகே நகரமலை பகுதியைச் சேர்ந்த நாகராஜ், அவரது மகன் வெங்கடேஷ், மகள் ரேவதி, மருமகன் அசோக்குமார் ஆகியோர் குடும்பத்துடன் சேலம் செவ்வாய்பேட்டை மற்றும் அழகாபுரம் பகுதிகளில் ஆர்.கே என்ற பெயரில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவனம் நடத்தி வந்துள்ளனர். இந்த நிறுவனத்தில் 60 ஆயிரம் கொடுத்தால், 6 லட்சம் மதிப்பிலான கார், 10 ஆயிரம் கொடுத்தால் மோட்டார் சைக்கிள், குறைந்த அளவு பணம் கட்டினால் தங்கம், வெள்ளி வழங்கப்படும் என கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வழங்கியுள்ளனர். இதனை நம்பி சேலம் மற்றும் நாமக்கல் சுற்று வட்டாரங்களில் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லட்சக்கணக்கில் பணம் கட்டி உள்ளனர். ஆனால் 60 ஆயிரம் கொடுத்தவரிடம் வரி செலுத்த வேண்டும், டெலிவரி சார்ஜ் கொடுக்க வேண்டும் என மேலும் பணத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அறிவித்தபடி கார் கொடுக்கவில்லை. இதேபோல் மற்ற அறிவிப்புகளுக்கு பணத்தை பெற்று கொண்டு, பொருட்கள் எதையுமே கடந்த 6 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை என கூறி, அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்தனர்.

சேலம் மாவட்டத்தில் இருந்து 20 புகார்களின் அடிப்படையில் ஒரு கோடியே 6 லட்சம் ரூபாய் வரை புகார் வந்ததன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியீட்டு 100 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான இந்த நிறுவனத்தை நடத்தி வந்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் அந்த நிறுவனத்தை சேர்ந்த நாகராஜ் அவரது மகன் வெங்கடேசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள நாகராஜன் மகள் ரேவதி மற்றும் அவருடைய கணவர் அசோக் குமார் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News