சேலத்தில் அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
சேலத்தில் தனியார் மின்னணு சாதன உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்.
சேலம் புதுரோடு மின்னணு தொழிற்பேட்டை பகுதியில் தலேமா என்ற பெயரில் மின்னணு சாதன உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிறுவனத்தின் சம்பள ஒப்பந்தம் 2020 பிப்ரவரி மாதத்துடன் முடிவடைந்த நிலையில், புதிய சம்பள ஒப்பந்தத்திற்கு நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த மறுப்பதாக தொழிலாளர்கள் கூறினர். தொடர்ந்து சம்பள உயர்வு பேச்சுவார்த்தைக்கு நிர்வாகம் மறுத்து வருவதால் கடந்த 9ம் தேதி முதல் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஷபி தலைமையில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிறுவன வளாகத்தில் அமர்ந்து இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய ஒப்பந்தம் முடிந்து 18 மாதங்கள் ஆகிய நிலையில் நிர்வாகம் உடனடியாக தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த போராட்டத்திற்கு, பொது தொழிலாளர் சங்கம், நாம் தமிழர் சங்கம், பாரதிய மஸ்தூர் சங்கம் ஆகிய சங்கங்களும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.