கொள்ளுபேத்தியுடன் 100வது பிறந்தநாள் கொண்டாடிய முன்னாள் அமைச்சரின் மகள்

கொள்ளுபேத்தியுடன் 100 ஆவது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய முன்னாள் அமைச்சரின் மகள். சேலத்தில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்

Update: 2021-09-26 07:00 GMT

கொள்ளுப்பேத்தியுடன் 100வது பிறந்த நாள் கொண்டாட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் மறைந்த மருத்துவர் குருபாதம். இவர் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1948 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சரவையில் அங்கம் வகித்தவர். இவரது மகள் சகுந்தலா தேவசுந்தரம். கோவையில் 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி பிறந்த இவர் தனது 100வது பிறந்தநாளை சேலத்தில் தனது மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்தி மற்றும் கொள்ளுபேத்தியுடன் கேக் வெட்டி கொண்டாடினார். இவருக்கு 2 மகன்கள், 1 பேரன், 2 பேத்திகள், 1 கொள்ளுபேத்தி உள்ளனர்.

தனது 100 ஆவது வயதிலும் கூட யார் உதவியையும் எதிர்பாக்காமல் தானே சமைத்து சாப்பிட்டு, அவரது தேவைகளை அவரே பூர்த்தி செய்து கொள்கிறார். மேலும் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே பெண்களுக்கு கல்வி அவசியம் என அவரது தந்தை சகுந்தலாவை பட்டப்படிப்பு படிக்க வைத்துள்ளார். கணிதத்தில் பட்டம் பெற்ற சகுந்தலா டெல்லியில் உள்ள பிரபல பள்ளிகளில் கணித ஆசிரியராக பணியாற்றி உள்ளார். மேலும் கணித மாமேதை இராமானுஜர் தீர்வு கண்டிராத வடிவியல் சூத்திரங்களை தீர்வு கண்ட குழுவில் இடம் பெற்றுள்ளார். 

டெல்லியில் கணித ஆசிரியராக பணியாற்றிய போது, அப்போது குடியரசு தலைவராக இருந்த சாகீர் உசேன், வி.வி.கிரி மற்றும் பிரதமர் இந்திரா காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுடன் நெருங்கி பழகி உள்ளார். அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவரின் பேரன்கள் ஒருங்கிணைத்து 100 ஆவது பிறந்தநாள் பரிசாக சகுந்தலாவிடம் வழங்கினர். 

இது குறித்து சகுந்தலா கூறுகையில், கொள்ளு பேத்தியுடன் தனது 100 ஆவது பிறந்தநாளை கொண்டாடியது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், இயற்கையோடு ஒன்றி வாழ்வதால் தான் தற்போதும் தான் தனது தேவைகளை தானே செய்து கொள்ள முடிவதாவும் தெரிவித்தார். மேலும் இளைய தலைமுறையினர் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Tags:    

Similar News