சேலத்தில் நடைபெற்ற வாகன தணிக்கையில் உரிய ஆவணங்கள் இல்லாத 2 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் சேலம் மாவட்டத்தில் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந் நிலையில் திருவாகவுண்டனூர் பைபாஸ் பகுதியில் நேற்று நள்ளிரவு துணை வட்டாட்சியர் சாஜிதா தலைமையில் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது அவ்வழியே காரில் வந்த சேலம் செவ்வாய்பேட்டையில் மளிகை கடை நடத்தி வரும் ஜமால் பாஷா வியாபாரம் முடிந்து ஜங்ஷனில் உள்ள வீட்டுக்கு சென்றபோது அவரது வாகனத்தை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது காரில் ரூ. 2 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது தான் ஒரு மளிகை கடை வியாபாரி என்றும் மளிகை பொருட்கள் மொத்தமாக வாங்குவதற்காக பணம் எடுத்துச் செல்வதாக தெரிவித்தார். ஆனால் பணத்திற்கான உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்களை காண்பித்து பிறகு பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தனர். இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.