நீதிமன்ற பணித் தேர்வில் பங்கேற்க வந்தவர்கள் சமூக இடைவெளியை மறந்த பரிதாபம்
சேலத்தில், நீதிமன்ற பணி எழுத்து தேர்வில் பங்கேற்பதற்காக வருகை தந்த தேர்வர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூடியதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
நீதிமன்றங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டு நாள் எழுத்துத்தேர்வு சேலம் மாவட்டத்தில் 11 மையங்களில் இன்று தொடங்கின. 19,600 நபர்கள் தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினம் 13,600 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
இந்நிலையில் சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற எழுத்துத் தேர்வில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த தேர்வர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் ஆங்காங்கே ஒன்று திரண்டு இருந்தது மீண்டும் நோய் தொற்று பரவும் அபாயத்தை ஏற்படுத்தியது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து தேர்வு நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், சமூக இடைவெளியை கடைபிடிக்காத தேர்வுகளை ஒழுங்குபடுத்த அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது பரபரப்பை ஏற்படுத்தியது.
பல்வேறு மாநிலங்களில் கொரோனா மூன்றாம் அலை அதி தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் அதிகாரிகளின் இது போன்ற அலட்சியம் மூன்றாவது அலை பரவ காரணமாகிடும். எனவே, நாளை நடைபெற உள்ள தேர்விலாவது தேர்வர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.