சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 183 பேர் இன்று அதிகாலை சேலம் வந்தனர்.
தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதால் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் இருந்த தமிழக முன்னாள், இன்னாள் முதல்வர்களின் படங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்கள் அகற்றப்பட்டன. மேலும் நேற்று காலை முதலே பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிக் கொடி கம்பங்கள், சுவர் விளம்பரங்களை அழிக்கவும் அந்தந்த கட்சியினருக்கு தேர்தல் அலுவலர்கள் அறிவுறுத்தினர்.
இந்தநிலையில் சேலம் மாவட்ட தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து மத்திய தொழில் பாதுகாப்புப்படையைச் சேர்ந்த 183 வீரர்கள் இன்று அதிகாலை சிறப்பு ரயில் மூலம் சேலத்திற்கு வந்தனர்.தொடர்ந்து அவர்கள் அனைவரையும் ஆயுதப்படை மைதானம் மற்றும் தனியார் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டு பணி விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.